Asianet News TamilAsianet News Tamil

செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது

Madras HC refuses to stay Enforcement Directorate investigation against Senthil Balaji smp
Author
First Published Mar 13, 2024, 5:59 PM IST

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, வேலை வாங்கித்தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. இந்தக் குற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு மற்றும் டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. அவரது ஜாமீன் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதுடன், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

குஷ்பு பேனரை செருப்பால் அடித்து, உருவ பொம்மை எரித்து திமுக மகளிரணி போராட்டம்!

இதனிடையே, தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “மோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் முன்பு அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தொடங்க முடியாது. அமலாக்கத்துறை வழக்கை விசாரணைக்கு அனுமதிக்கும் பட்சத்தில் மோசடி வழக்கில் விடுவிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும்.” என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அமலாக்கத் துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது என கூறி, அமலாக்கத் துறை பதிவு செய்து விசாரித்து வரும் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios