தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசு, தமது மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒத்துழைப்பு தருவதாக அறிவித்தது. இதற்காக 5 இடங்களை தேர்வு செய்யப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு மாசு இல்லாத சுற்றுச்சூழல், போக்குவரத்து வசதி, குறிப்பிட்ட தூரத்தில் விமான நிலையம், சுத்தமான தண்ணீர் ஆகியவை உள்பட சில அடிப்படை வசதிகள் தேவை என மத்திய சுகாதார துறை தெரிவித்தது.

அதன்பேரில், செங்கல்பட்டு அருகே மறைமலை நகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 5 இடங்களை தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அதற்கான அறிவிப்பை அளித்தது.

இதையடுத்து, அதே ஆண்டு அக்டோபர் மாதம், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான தனிக்குழு, மேற்கண்ட 5 இடங்களையும் ஆய்வு செய்து சென்றது. ஆனால், அதன்பின்னர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதுபற்றி பலமுறை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, விரைவில் அமைக்கப்படும் என்ற பதில் மட்டுமே மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு தாமதம் செய்வதாக கூறி, மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், “தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது அமைக்கப்படும் என கேள்வி எழுப்பியது. மேலும், இதற்கான பதிலை இன்று மதியம் 2.15 மணிக்குள் அறிக்கையாக, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.