டிஜிபி ராஜேந்திரன் மீதான லஞ்ச ஊழல் புகார்களை விசாரிக்க 2 வாரங்களுக்குள் தனி  குழுவை அமைக்க  வேண்டும்  என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு சென்னையில் உள்ள குட்கா தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் டிஜிபி டி. கே. ராஜேந்திரன் உள்பட பல உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக தொடர தடை விதிக்க வேண்டும். அவரது பதவி நீட்டிப்பு உத்தரவை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த கே. கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் இன்று அளித்தனர். டிஜிபி யாக ராஜேந்திரன் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினர்.

அதே நேரத்தில் டிஜிபி ராஜேந்திரன் மீதான லஞ்ச ஊழல் புகார்களை விசாரிக்க 2 வாரங்களுக்குள் தனி  விசாரணைக்குழுவை  அமைக்க  வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விசாரணையில் அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ குறுக்கீடு செய்யக்கூடாது என்றும், விசாரணை  அதிகாரி விசாரிப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் நேரடியாக கண்காணிக்க வேண்டும் எனவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.