முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, சாந்தன்,பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்பட 7 பேர் கைது செய்யப்பபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில், பேரறிவாளன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பரோலில் வெளியே விட அனுமதிக்க கோரி, அவரது தயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு, பரிசீலனை செய்யவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் கடந்த வாரம், சிறை வாழ்க்கை தனக்கு வெறுத்துவிட்டதாகவும், இதனால் உண்ணாவிரதம் இருந்து ஜீவசமாதி அடைய போவதாக முருகன் தெரிவித்தார். இதற்கு அனுமதி கேட்டு, சிறைத்துறை அதிகாரிகளுக்கு மனு செய்து இருந்தார்.

இதையொட்டி கடந்த 4 நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனால், 6 மாதம் தன்னை பரோலில் விட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்தார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள், ஒருவர் பின் ஒருவராக மனு செய்து வருவதால், சிறைத்துறை நிர்வாகம், குழப்பத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளியான ரவிச்சந்திரனை, ஒரு மாதம் பரோலில் விட வேண்டும் என அவரது தாய் ராஜேஸ்வரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி,ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்திடம் கருத்து கேட்டது. அதற்கு, ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஒவ்வொருவரும் தொடர்ந்து பரோல் கேட்டதால் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நீதிமன்றம், ரவிச்சந்திரனின் பரோல் மனுவை தள்ளுபடி செய்தது.