நிரம்புது மதுராந்தகம் ஏரி... செல்ஃபி எடுக்காதீங்க மக்களே... 21 கிராம மக்களுக்கு எச்சரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது மிகப் பழைமையான மதுராந்தகம் ஏரி. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பாசன பகுதிகள், குடிநீர்த் தேவை என பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உள்ள மிகப் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி, தற்போதைய மழையினால் நிரம்பி வருகிறது.
மதுராந்தகம் ஏரியின் மொத்த கொள்ளளவு 23.20 அடி. இதில், தற்போது நீரானது 21 அடியை எட்டியுள்ளது. ஏரிக்கு 5,000 கன அடி நீர் வரத்து உள்ளதால், ஏரி விரைவில் நிரம்பிவிடும் என்று கூறப்படுகிறது. இதை அடுத்து, ஏரியில் இருந்து கிளியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனினும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
இதனை அடுத்து கத்திரிச்சேரி, விமுதமங்கலம், முன்னூத்திகுப்பம், முருக்கச்சேரி, தச்சூர் உள்ளிட்ட ஏரியின் வலது கரை கிராமங்களுக்கும், மலைப்பாளையம், கருங்குழி, தோட்டநாவல், மேட்டுக்காலனி, இருசாமநல்லூர் உள்ளிட்ட இடது கரை கிராமங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏரி முழுதும் நிரம்பி வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும் படி, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. ஏரியிலிருந்து திறந்து விடப்படும் வெள்ள நீர் கிளியாற்றில் செல்லும் நிலையில் அதனை பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்கவோ, செல்பி உள்ளிட்ட புகைப்படம் எடுக்கவோ வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.