போக்குவரத்து தொழிலாளர்கள் 13வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கள் போராட்டம் தொடர்வது குறித்து, நிர்வாகிகள் அ.சவுந்தர்ராஜன் (சி.பி.எம்), சண்முகம் (தொ.மு.ச) உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால், மாநிலம் முழுவதும் பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தனியார் சிலரை வைத்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 

தனியார் பஸ்கள் தன்னிச்சையாக டிக்கெட் கட்டணத்தை வசூல் செய்கின்றன. கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுகின்றனர். பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளனர்.

தங்களுக்கு சேரவேண்டிய தொகையை, தங்களது உரிமையை கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நேரத்தில் தனியார் டிரைவர்கள், கண்டக்டர்களை தினக்கூலிக்கு அழைத்து வேலை செய்வது விதி மீறல் செயல். கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது.

போக்குவரத்து துறையில் மாதம் ரூ-156 கோடி நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. அதை அரசு ஈடு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை சார்பில், ஏற்கனவே அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனா, இதுவரை எவ்வித பதிலும் இல்லை. போக்குவரத்து துறை நிர்வாகமே ரூ.156 கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இதைவிட வேறு சான்று தேவையில்லை.

முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து எவ்வித பதிலும் தெரிவிக்காததால், நஷ்டத்தை ஈடுகட்ட முடியாமல் பணம் நிலுவையில் உள்ளது. எங்களை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைக்கின்றனர். நிலுவை தொகையை படிப்படியாக வழங்குகிறோம் என கூறியுள்ளனர்.

ஊதிய உயர்வு பற்றிய பேச்சு வார்த்தையில் எதையும் பேசாமல், நாங்கள் எப்படி வேலைக்கு செல்வது. உடனடியாக 13வது ஊதிய உயர்வுக்கான நிதியை, அரசு உயர்த்தி வழங்க வேண்டும். எங்களுடன் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். 

அந்த பேச்சு வார்த்தையின்போது, எந்தவித புதிய கோரிக்கையும் இல்லை. பழைய கோரிக்கை மட்டுமே உள்ளது. அதை மட்டும் சரி செய்தால் போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.