விருதுநகர்

தன்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போகும் இராணுவ வீரரை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காதலி தீக்குளிக்க முயற்சித்தார்.

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும், வெம்பக்கோட்டை அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது அவர் திடீரென தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றித் தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி அவரது தலையில் தண்ணீரை ஊற்றி அவரைக் காப்பாற்றினர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், “நான் தாயில்பட்டி பள்ளியில் படித்தபோது கோமாளிபட்டியைச் சேர்ந்த பாண்டிகுமார் (25) என்பவரும் படித்தார்.

இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில் பாண்டிகுமாருக்கு இராணுவத்தில் வேலை கிடைத்தது. இருவரும் செல்லிடப்பேசி வழியாக தொடர்ந்து பேசி வந்தோம்.  

கடந்தாண்டு செப்டம்பரில் என்னை திருமணம் செய்து கொள்வதாக பாண்டிகுமார் கூறினார். பின்னர், குடும்ப சூழ்நிலை சரியில்லாததால் இந்தாண்டு மார்ச்-ல் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.

ஆனால், திருமணம் செய்யாமல் என்னிடம் பேசுவதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதை அறிந்தேன்.

இதனையடுத்து, அவரது வீட்டிற்குச் சென்று நியாயம் கேட்டேன். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேசிக் கொள்ளலாம் எனக் கூறினர்.

ஆனால், திங்கள்கிழமை பாண்டிகுமாருக்கும் வேறோரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே, அதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் புகார் அளித்தேன்.

அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் மகளிர் காவல் நிலையத்துக்குத் தெரிவித்தார். ஆனால் மகளிர் காவலாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க முயற்சி செய்தேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்க காவலாளர்கள் அழைத்துச் சென்றனர்.

காதலனை சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.