கரூர்

திருமணம் குறித்து காதலியிடம் பேசச் சென்ற காதலன் வாக்குவாதம் முற்றியதில் காதலியை கழுதை இறுக்கி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் கரூரில் சோகத்தை ஏற்படுத்தியது.

கரூர் மாவட்டம், குட்டக்கடை பகுதியைச் சேர்ந்தவர் துரை ராஜ். இவரது மனைவி கௌரி சங்கரி. இவர்களது மகள் சண்முகப்பிரியா (22). 

திருவாரூர் மாவட்டம் பழையபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் வினோத் (27). 

சண்முகப்பிரியாவும், வினோத்தும் கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் வினோத் கடந்த வாரம் கௌரிசங்கரியிடம், தான் சண்முகப்பிரியாவைத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த கௌரிசங்கரி இரண்டு வருடங்களுக்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதாகக் கூறினாராம்.

இந்த நிலையில் நேற்று காலை வினோத் சண்முகப்பிரியா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கௌரிசங்கரி வெளியில் சென்றிருந்தார். சண்முகப்பிரியாவிடம் வினோத் தங்களது திருமணம் தொடர்பாக பேசியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

ஒருகட்டத்தில் சண்முகப்பிரியாவின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துவிட்ட வினோத், தானும் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் கும்மராஜா, நகர காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இருவரது சடலத்தையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிந்த காவலாளர்கள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.