காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வேறொருவருடன்  திருமணம் நடத்த ஏற்பாடு செய்ததால் மணமகளும், அவரது காதலனும் தனித்தனியாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல்அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் பாரதி. வயது 20.  

அதே மாவட்டத்தில் கீழ்அச்சமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் நவநீதம். இவரது  மகன் கார்த்தி வயது 21. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்நிலையில், பாரதியும் கார்த்தியும் கடந்த 3 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். 

இதையடுத்து இவர்களின் காதலுக்கு பாரதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. மேலும் கார்த்தியை சந்திக்க முடியாதபடி திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 
ஆனாலும் விடுமுறை நாட்களில், சொந்த ஊருக்கு வரும் பாரதி, காதலன் கார்த்தியை சந்தித்து பேசி வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் பெற்றோர் அவருக்கு வரும் 25ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். 

இந்நிலையில், உறவினர்களுக்கு திருமண பத்திரிகை வழங்குவதற்காக நேற்று பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த பாரதியும் கார்த்தியும் ஏற்கனவே பேசிக்கொண்டபடி அவரவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். 

இதைப்பார்த்த பெற்றோர் பாரதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும் அதேபோல் கீழ்அச்சமங்களத்தில் தனது வீட்டில் மயங்கிய கிடந்த கார்த்தியை உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.