நீலகிரி

திம்பம் மலைப் பாதையின் பள்ளத்தில் இறங்கிய லாரி அந்தரத்தில் தொங்கியதால் மூன்று மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுதாரித்து கொண்ட ஓட்டுநர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார்.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகரில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று மாலை 4 மணியளவில் டேங்கர் லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த லாரி நேற்று மாலை 4 மணியளவில் சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வந்தது. அப்போது 19-வது கொண்டை ஊசி வளைவில் குறுகிய வளைவில் திரும்பிய லாரி எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் சட்டென்று இறங்கியது. 

இதில் லாரி அந்தரத்தில் தொங்கியது. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சுரேஷ் லாரியில் இருந்து வெளியே குதித்துவிட்டார். இதனால் அவர் இலேசான காயங்களோடு உயிர் தப்பினார். 

அந்தரத்தில் தொங்கியபடி லாரி நின்றுக் கொண்டிருந்ததால் திம்பம் மலைப்பாதை வழியாக பேருந்து, கார், லாரி, வேன், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

அதன்பின்னர், சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனை ச் சாவடியிலும், கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் ஆசனூர் சோதனைச் சாவடியிலும் தடுத்து நிறுத்தப்பட்டன. 

இதனைத தொடர்ந்து பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்கும் பணி நடைப்பெற்றது. சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த மீட்பு பணியில் ஒருவழியாக லாரி மீட்கப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீராகவும் அரை மணி நேரம் எடுத்து கொண்டது.