மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆயில் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீவிபத்தால் பல லட்சம் மதிப்புள்ள ஆயில் பேரல்கள் தீயில் எரிந்து நாசமாயின.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து ஆயில் பேரல்களை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று கிளம்பியது. இந்த லாரி, தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தது.

நேற்று நள்ளிரவு திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சமயநல்லூர் மேம்பாலம் அருகே வந்தபோது லாரியில் திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று வேகமாக வீசியதாலும், லாரியில் இருந்த ஆயில் பேரல்கள் வெடித்துச் சிதறியதாலும் தீ வேகமாக பரவியது. 

இந்த தீ விபத்தில், லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தோர், தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், லாரியில் ஏற்பட்ட தீயை அணைக்க கடுமையாக போராடினர். நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இதில் லாரி முழுவதும் நாசமடைந்தது.

லாரியில் தீ விபத்து ஏற்பட்டவுடன், லாரி ஓட்டுநர் உடனடியாக இறங்கி தப்பித்தார். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. லாரியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.