மாமல்லபுரத்தில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியைத் தாக்கி 1 இலட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம், 29 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், கிரெடிட் கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்ற மர்ம ஆசாமிகள் காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செனிஜா மொரெளி (50). இவர் ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்தவர். தமிழகத்திற்குச் சுற்றுலாப் பயணியாக வந்த இவர், மாமல்லபுரத்தில உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார்.

செவ்வாய்க்கிழமை மாலையில் கடற்கரையில் நடந்துச் சென்றபோது, மர்ம ஆசாமிகள் மூன்று பேர் அவரை வழிமறித்துத் தாக்கி, அவரிடம் இருந்த பையைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

அவர்களை விரட்டிப் பிடிக்க செனிஜா முயற்சித்தும் முடியவில்லை. உடனே, இதுகுறித்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் செனிஜா புகார் தெரிவித்தார்.

அந்த புகாரில் மர்ம ஆசாமிகள் பறித்துச் சென்ற பையில் 1400 யூரோ டாலர் (இந்திய மதிப்பில் 1 இலட்சத்து 171 ரூபாய்), 250 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16 ஆயிரத்து 986 ரூபாய்), இந்திய பணம் ரூ.1000, ரூ.29 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி, கிரெடிட் கார்டு மற்றும் பாஸ்போர்ட் இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த புகாரி பேரில், மாமல்லபுரம் காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தமிழகம் வந்த வெளிநாட்டுப் பயணியிடம் கொள்ளையடித்து தமிழகத்தின் மானத்தை காற்றிலே பறக்கவிட்டு, தமிழகத்திற்கு அவப்பெயரை வரவழைத்துள்ளது இந்தச் சம்பவம்”.