TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று கூடுகிறது தமிழக சட்டப் பேரவை..!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2026ம் ஆண்டுக்கான கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டுகளில் தமிழக அரசின் உரையை முழுதாக வாசிக்காத நிலையில், ஆளுநர் இன்றையை உரையை முழுதாக வாசிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்
2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்க உள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த கூட்டத்தொடர் மிகவும் பரபரப்புடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளுநர் உரை
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற முறையில் ஆளுநரின் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவு அதனை தமிழில் வாசிப்பார். அதனைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு, அலுவல் குழு கூடி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
உரையை வாசிப்பாரா ஆளுநர்..?
பொதுவாக தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் உரையை அப்படியே வாசிப்பது தான் மரபு. ஆனால் கடந்த 2022ம் ஆண்டுக்கு பின்னர் ஆளுநர் அதனை செய்வதில்லை. கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையின் போது, மகளிர் முன்னேற்றம், மதசார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார்.
ஆனால் இந்த வார்த்தைகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இடம் பெறும் என்று முதல்வர் அவையிலேயே அறிவித்ததால் ஆத்திரமடைந்த ஆளுநர் ஆவேசமாக அவையில் இருந்து வெளியேறினார். இதே போன்று கடந்த 2024ம் ஆண்டு தமிழ்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் அவையில் இருந்து வெளியேறினார்.
அதே போன்று 2025ம் ஆண்டு முதலில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று கூறி ஆளுநர் ரவி அவையில் இருந்து வெளியேறினார். இதனிடையே தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தமிழக அரசின் சாதனை திட்டங்கள், கொள்கை முடிவுகள் உள்ளிட்டவை உரையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

