அரியலூர்

அரியலூரில், கூட்டுறவு சங்கத் தேர்தலில் மனு தாக்கல் செய்தோரின் பெயர்களை வெளியிடக் கோரி சிறுகளத்தூர் பாரதியார் நெசவாளர் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே சிறுகளத்தூர் பாரதியார் நெசவாளர் கூட்டுறவு சங்க இயக்குநர் தேர்தலில் போட்டியிட 21 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.  

அந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட தேர்தல் அலுவலர் பாலசுந்தரம், மனு தாக்கல் செய்தோரின் பெயர்ப் பட்டியலை வெளியிடாமல், கடந்த மூன்று நாள்களாக அலுவலகத்திற்கும் வரவில்லை . 

இதனைக் கண்டித்தும், பெயர் பட்டியலை உடனடியாக வெளியிட  வேண்டும் என்று வலியுறுத்தியும், திமுக  வடக்கு ஒன்றியச் செயலாளர் ஞானமூர்த்தி தலைமையில் இதர சங்க உறுப்பினர்களும் மாற்றுக் கட்சியினரும்  சேர்ந்து, கூட்டுறவு சங்க அலுவலகத்தை பூட்டி, வாசல் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.