தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வந்த மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நிறைவுபெற்றது.
தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வந்த மறுவாக்குப்பதிவு நிறைவுபெற்றது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப் 19 ஆம் தேது அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டன. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது.

கள்ள ஓட்டு தொடர்பான புகார்கள் காரணமாக சென்னை, மதுரை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் உள்ள 51 வது வார்டிலும், பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதியில் உள்ள 179 வார்டிலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் 17 வது வார்டிலும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 16 ஆவது வார்டுக்கு உட்பட்ட இரு வாக்குச்சாவடிகளிலும் மற்றும் திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25ல் உள்ள இரு வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடிபெற்றது.

7 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய மறு வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணிவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
