நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த  மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து காணொளி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டங்களை நடத்திய மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், மாவட்டங்களுக்கு நேரில் சென்று தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், புதிதாக பெயர் சேர்க்கவோ அல்லது திருத்தம் மேற்கொள்ளவோ கால அவகாசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் 17 மாநகராட்சிகள், மொத்தமுள்ள 150 நகராட்சிகளில் 110 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. புதிதாக தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவற்றின் எல்லைகளை வரையறை செய்வது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அதன் அடிப்படையில் அண்மையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், சென்னையில் மொத்த வாக்காளர்கள் 40,54,038 ஆக உள்ளனர். ஆண்கள் 19,92,198 பேர், பெண்கள் 20,60,767 பேர், திருநங்கைகள் 1073 பேர் உள்ளனர். சென்னையில் குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 1,76,679 பேருடன் துறைமுகம் தொகுதி உள்ளது. சென்னையில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக 3,15,502 பேருடன் வேளச்சேரி தொகுதி உள்ளது. 

முன்னதாக தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலானது கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. அதை தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இதனை அடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்கும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனையும் நடைபெற உள்ளது. 

நகர்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரியில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பானையை ஜனவரி 3-வது வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2-கட்டமாக தேர்தலை நடத்தவும், தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வார்டு மறுவரையரை முடிந்ததால் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.