குமரி மாவட்ட தொழிலதிபர் முருகன் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அவரது வீடு மற்றும் கடை ஜப்தி செய்யப்பட்டது. 

தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்ற தொழிலதிபர்

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். தொழிலதிபரான இவர் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 கோடியே 70 லட்சம் ருபாய் தொழில் கடனாக வாங்கி உள்ளார். அதற்கு அடமானமாக வீடு அமைந்திருக்கும் இடத்தின் ஆவணம் மற்றும் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் உள்ள கடையின் ஆவணங்களை தனியார் நிதி நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த தொழிலதிபர்

இந்நிலையில் அதே ஆண்டு விபத்து ஒன்றில் சிக்கி முருகன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து வாங்கிய கடனை சரியாக செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று ஆண்டி வட்டி சேர்த்து 2 கோடியே 75 லட்சம் ரூபாய் நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருந்தது. முறையாக கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என்பது தொடர்பாக பலமுறை நிதி நிறுவன ஊழியர்கள் முருகனின் உறவினர்களை தொடர்பு கொண்ட இதனையடுத்து கடனை திரும்ப செலுத்த அறிவுறுத்திய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு

இதனையடுத்து நிதி நிறுவனம் கடனை வசூல் செய்ய நீதிமன்றத்தை நாடி 2023ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நாகர்கோவில் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் முருகன் வங்கியில் கடன் பெறுவதற்காக வங்கிக்கு செலுத்திய ஆவணங்களுக்கு சொந்தமான இடங்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.

வீட்டுக்கு சீல்

அதன்படி நிதி நிறுவன அதிகாரிகள் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்து முதலில் நித்திரவிளை சந்திப்பு பகுதியில் இருந்த எலக்ட்ரிக் கடைக்கு சீல் வைத்தனர். பின்னர் கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள முருகனின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அந்த பங்களா வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். வீட்டை பூட்டிக்கொண்ட வெளியே செல்ல மறுத்து பெண்களும், சிறுவர்களும் அடம் பிடித்த நிலையில் அவர்களை குண்டுகட்டாக தூக்கியும் இழுத்தும் போலீசார் துணையுடன் வெளியேற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இந்நிலையில் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனம் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்து ஜப்தி உத்தரவு பெற்று வீட்டையும், கடையையும் ஜப்தி செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட முருகனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட முருகனின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இன்று தமிழ்நாடு இந்து அரையர் பேரவையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.இறந்துபோன முருகனின் மனைவி உமா மகேஸ்வரி தனது வீட்டை ஜப்தி செய்யாமல் இருக்க உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று வழக்கை நடத்தி வந்த நிலையில் சட்டத்திற்கு புறம்பாக வங்கி ஊழியர்கள் வழக்கறிஞர்கள் அத்துமீறி வீட்டின் உள்ளே புகுந்து அவதூறாக பேசியதுடன் அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பூட்டிய வீட்டையும், கடையையும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.