சமத்துவபுரம் முதல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வரை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த முக்கிய திட்டங்களை இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி அரசியல் மட்டுமின்றி, கலை, இலக்கியம், சினிமா என தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்ட்டில் சமத்துவபுரம் தொடங்கியது முதல் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது வரை பல்வேறு முத்தான திட்டங்களை கொண்டு வந்த பெருமை கருணாநிதியையே சேரும். தமிழ்நாட்டுக்கு கருணாநிதி கொண்டு வந்த முக்கிய திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
குடிசை மாற்று வாரியம் உருவாக்கம்
கருணாந்தி ஆட்சிக் காலத்தில் தான் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் கொண்டு வரப்படது. மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா முறைக்கு தடை விதித்தவர் கருணாநிதி தான். இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கும் உள் ஒதுக்கீட்டை வழங்கினார்.
உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நீக்கினார்
இப்போது சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெரும் உதவி புரியும் மெட்ரோ ரயில் திட்டத்தை கருணாநிதி தான் கொண்டு வந்தார். 108 ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வந்தவர் அவர் தான். மாணவர்களுக்கு இலவச பஸ் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன் உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வை நீக்கி ஏழை மாணவர்களுக்கு உதவினார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகத்தை அரசுடமையாக்கி மினி பேருந்து சேவையை அறிமுகப்படுத்தினார். தமிழக காவல்துறையினருக்கு ஆணையம் அமைக்க உத்தரவிட்ட கருணாநிதி, தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஊதியத்துடன் கூடிய அரசு விடுமுறை அறிவித்தார். விவசாயிகளுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததுடன், மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைத்து விவசாயிகளின் அதிகப்படியான வருமானத்துக்கு வழிவகுத்தார். நாட்டிற்கே முன்னோடியாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொண்டு வந்தார்.
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு
பெண்களுக்காக முத்தான திட்டங்களை கொண்டு வந்தது கருணாநிதி தான். ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என முக்கிய திட்டங்களை நிறைவேற்றினார்.
தமிழை செம்மொழியாக்கினார்
தமிழ் மொழிக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி. தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாராத்தினை பெற்றுக் கொடுத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளூவருக்கு 133 அடி உயர சிலை அமைத்தார். தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்று பெயரிட்டார். மெட்ராஸ் என்பதை சென்னை என மாற்றினார். இதேபோல் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் போன்ற நாட்களில் மாநில முதல்வர்கள் கொடியேற்ற வழிவகை செய்வதவர் கருணாநிதி தான்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற முத்தான அறிவிப்பை வெளியிட்டார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 சதவீதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீத இடஒதுக்கீடு வழங்கினார். அனைத்து சமூகத்தினரும் சேர்ந்து வாழும் வகையில் சமத்துவபுரங்களை உருவாக்கியவர் கருணாநிதி. ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுத்தார். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வந்தார். மூன்றாம் பாலித்தினவர்களுக்கு திருநங்கைகள் திருநம்பிகள் என்று பெயர் சூட்டினார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 12 அரசு பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.
