தமிழ்நாட்டில் தேர்தலுக்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்டார் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ்நாடு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை இறுதி செய்து கோதாவில் இறக்கி விட்டுள்ளனர். இதில் திமுக கூட்டணியில் உள்ள தேமுதிக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விருதாச்சலம் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். அங்கு பிரேமலதாவை எதிர்த்து பாமக போட்டியிடுகிறது. அதேபோல் விருதுநகரில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வி.ஜி.கணேசன் களம் காண்கிறார்.
தருமபுரியில் தேமுதிக-வை சேர்ந்த இளங்கோவன் போட்டியிடும் நிலையில் அங்கு அவரை எதிர்த்து பாமக களம் காண்கிறது. இதேபோல திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும், அதிமுக-வும் நேருக்கு நேர் 18 தொகுதிகளில் கோதாவில் இறங்குகின்றன. இதில் ஸ்ரீபெரும்புதூரில் அதிமுகவின் பழனி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் மனோகரன், கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் மோதுகின்றனர். அதேபோல சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவைகுண்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோரையும் காங்கிரஸ் வேட்பாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் சிந்தனைச்செல்வன் போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில், அங்கு பாமக களம் காண்கிறது. அதேபோல திண்டிவனத்தில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசுவை எதிர்த்து அதிமுக சார்பில் அர்ஜுனன் களம் காண்கிறார். திருப்போரூரில் எஸ்.எஸ்.பாலாஜியை எதிர்த்து பாமக போட்டியிடுகிறது. இதுதவிர செய்யூர், அரக்கோணம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, பண்ரூட்டி, ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து, விசிக வேட்பாளர்கள் களமிறக்கப்படுகின்றனர்.
பெரியகுளத்தில் அமமுக வேட்பாளர் கதிர் காமுவை, விசிக வேட்பாளர் எதிர்கொள்கிறார். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கீழ்வேளூர் தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். மதிமுக சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் செந்தில்நாதன் களமிறங்கும் நிலையில், அங்கு அவரை எதிர்த்து பாஜக போட்டியிடுகிறது. கடையநல்லூரில் ராஜேந்திரன் போட்டியிடும் நிலையில், அங்கு அதிமுகவின் கிருஷ்ண முரளி களம் காண்கிறார். மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் சீர்காழியில், செந்தில் செல்வன் போட்டியிடும் நிலையில், அங்கு அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் சக்தி களமிறக்கப்பட்டு உள்ளார்.
அதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திருச்செங்கோட்டில் போட்டியிடும் நிலையில், அங்கு அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார். பொள்ளாச்சியில் நித்யாநந்தன் களமிறங்கும் நிலையில், அங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் போட்டியிடுகிறார். சிவகங்கையில், முக்குலத்தோர் புலிப்படை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பில், செந்தில்நாதன் போட்டியிடுகிறார்.


