TASMAC Shop: மதுவால் ஏற்படும் சமூக தீமைகளுக்கு எதிராக பெண்கள் போராடிய நிலையில் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது.

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கு மட்டும் அரசும், காவல்துறையும் இப்படி துடிப்பது ஏன் எனத் தெரியவில்லை என அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் கிராமத்தில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் இரு டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் செயல்படும் குடிப்பகத்தாலும் ஏற்படும் சமூகக் கேடுகளைக் கண்டித்தும், மதுக்கடைகள் மற்றும் குடிப்பகத்தை மூட வலியுறுத்தியும் போராட்டம் நடத்திய அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின பெண்களை விசாரணைக்கு வருமாறு ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். மதுவால் ஏற்படும் சமூகத் தீமைகளுக்கு எதிராக பெண்கள் போராடிய நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பதிலாக விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது.

மது போதைக்கு அடிமையான சிறுவர்கள்

கல்லாத்தூர் பகுதியில் மதுக்கடைகள் மற்றும் குடிப்பகத்தால் ஏற்படும் பிரச்சினைகள் எண்ணில் அடங்காதவை. அங்குள்ள பள்ளிகள், பட்டியலின மக்களின் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த மதுக்கடைகளும், குடிப்பகமும் அமைந்துள்ளன. இதனால் அங்கு குடித்து விட்டு போதையில் வரும் குடிகாரர்களால் பெண்கள், குழந்தைகள், மாணவிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மதுக்கடைகளுக்கு வேகமாக செல்லும் வாகனங்களால் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் ஏற்படுகின்றன. இவை அனைத்துக்கும் மேலாக மிகவும் எளிதாக மது கிடைப்பதால் மாணவர்களும், சிறுவர்களும் மது போதைக்கு அடிமையாகின்றனர்.

பட்டியலின மக்கள் சாலை மறியல்

இந்தக் சமூகக் கேடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் மதுக்கடைகளையும், குடிப்பகத்தையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பிலும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் பல முறை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அவற்றுக்கு பயனின்றி போனதைத் தொடர்ந்து தான் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்குள்ள பட்டியலின மக்கள் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களுக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் பேச்சு நடத்திய காவல் துறையினர் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து தான் போராட்டம் கைவிடப்பட்டது.

விசாரணைக்கு அழைப்பது நியாயமற்றது

அதன்படி மதுக்கடைகளையும், குடிப்பகத்தையும் மூட வேண்டிய ஆட்சியாளர்கள், போராடிய பெண்களை விசாரணைக்காக அழைப்பது நியாயமற்றது. விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்தினால் அவர்கள் இனிவரும் காலங்களில் போராட மாட்டார்கள் என்று காவல்துறை தப்புக்கணக்கு போடுகிறது. உன்னதமான நோக்கத்திற்காக நடத்தப்படும் எந்தப் போராட்டத்தையும் மிரட்டல்களால் பணிய வைக்க முடியாது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

சம்மனை திரும்ப பெற வேண்டும்

சட்டம் - ஒழுங்கைக் காப்பது உள்ளிட்ட ஏராளமான பணிகள் காவல்துறையினருக்கு இருக்கும் நிலையில் அவற்றை விடுத்து பெண்களை மிரட்டும் செயலில் காவல்துறை ஈடுபடக் கூடாது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்கு மட்டும் அரசும், காவல்துறையும் இப்படி துடிப்பது ஏன் எனத் தெரியவில்லை. மக்கள் நலன் கருதி போராடிய கல்லாத்தூர் பெண்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை காவல்துறை திரும்பப் பெற வேண்டும். அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என தெரிவித்துள்ளார்.