விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடியில் இன்று அதிகாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஒரு அரசு வாகனம் வந்தது. அதை மறித்து நிறுத்திய போலீசார், அதில் வந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.

ஆனால், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால்,போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வாகனத்தில் சோதனை செய்தபோது, 54 மதுபாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து போலீசார், 3 வாலிபர்களையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், கள்ளக்குறிச்சி அருகே கரியூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (19), கலைச்செல்வன் (18), மற்றொரு கிருஷ்ணமூர்த்தி (20) ஆகியோர் என தெரிந்தது.

மேலும் விசாரணையில், புதுச்சேரியில் இருந்து அரசு வாகனத்தில் மதுபாட்டில்களை கள்ளக்குறிச்சிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது.

மதுபாட்டில்கள் கடத்துவதற்கு அரசு வாகனம் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கள்ளக்குறிச்சி வேளாண்மை உதவி இயக்குனராக பணியாற்றுபவர் கோவிந்தன். இவருக்கு வேளாண்மைத் துறையின் பணிகளை கவனித்து கொள்வதற்காக அரசு சார்பில் வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது பேரன் கிருஷ்ணமூர்த்தி, தனது நண்பர்களுடன் அரசு வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்தியது தெரிந்தது.

இதையடுத்து அதிகாரியின் பேரன் கிருஷ்ணமூர்த்தி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் மது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர். அரசு அதிகாரியின் வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.