பாசிச சக்திகளின் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுப்போம்: முதல்வர் ஸ்டாலின்!
பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
அமைச்சர் பொன்முடி மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதன்மூலம், பொன்முடியால் அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் தொடர முடியும் என்ற நிலை உருவானது.
இதையடுத்து, திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்த அறிவிக்கையை தேர்தல் ஆணையம் திரும்பப்பெற்றுக் கொண்டது. தொடர்ந்து, பொன்முடியை அமைச்சராக நியமிக்கவும், அவருக்கு உயர் கல்வித்துறையை ஒதுக்கிடவும் கோரி ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால், அதனை தமிழ்நாடு ஆளுநர் ஏற்கவில்லை. பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. மேலும், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் 22ஆம் தேதி (இன்று) மாலைக்குள் தமிழ்நாடு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனவும் கெடு விதித்து உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
அதன் தொடர்ச்ச்சியாக, பொன்முடிக்கு தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஆளுநர் ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், அவருக்கு ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பொன்முடி பதவியேற்பு!
இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி நீர்த்துப் போவதையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களுகு எதிரான செயல்களையும் இந்திய மக்கள் கண்டனர். ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் தேர்தல் 2024 மிக முக்கியமானது.
நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்.” என பதிவிட்டுள்ளார்.