ஈரோடு விஜயமங்கலத்தில் நடந்த கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் திமுகவை 'தீய சக்தி' என்று கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் பதிலளித்தார்.

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரக் கூட்டத்தில், திமுகவை ‘தீய சக்தி’ என்று அக்கட்சியின் தலைவர் விஜய் மிகக் கடுமையாகத் தாக்கினார்.

இதற்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பதில் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் பதில்

விஜய்யின் இந்த விமர்சனம் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பினர்.

"திமுகவை தீய சக்தி என்று விஜய் விமர்சித்துள்ளாரே, உங்கள் கருத்து என்ன?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, உதயநிதி ஸ்டாலின் புன்னகைத்தவாறே தனது பாணியில் பதிலளித்தார்.

"இதுபோன்ற கேள்விகளை எப்போதாவது அவரிடம் (விஜய்) கேட்டது உண்டா? முதலில் அவரைப் பேசவிட்டுப் பாருங்க... அப்புறம் உங்களுக்கே புரியும்," என்று சுருக்கமாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

விஜய் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருப்பதை குறிப்பிடும் வகையில் உதயநிதியின் பதில் அமைந்துள்ளது. விஜய்யின் விமர்சனங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பதற்காக அவ்வாறு உதயநிதி பதிலளித்துள்ளார் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

"திமுக ஒரு தீய சக்தி"

விஜயமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொண்டர்களிடையே உரையாற்றிய விஜய், ஆளுங்கட்சியான திமுகவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான சொற்களால் விமர்சித்தார்.

திமுகவை ஒரு "தீய சக்தி" என்று பலமுறை குறிப்பிட்ட விஜய், தனது தமிழக வெற்றிக் கழகத்தை "தூய சக்தி" என்று அடையாளப்படுத்தினார். வரவிருக்கும் அரசியல் களம் என்பது "தீய சக்தியான திமுகவுக்கும், தூய சக்தியான தவெகவுக்கும்" இடையிலான நேரடிப் போட்டிதான் என்று அவர் முழங்கினார்.

தீய சக்தியை வேரறுக்கத் தூய சக்தியான தவெகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் தனது உரையில் பதிவு செய்தார்.

அரசியல் களம் சூடுபிடிப்பு

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய பிறகு விஜய் தொடர்ந்து திமுகவை மிகத் தீவிரமாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக ‘தீய சக்தி’ என்ற சொல்லாடல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திமுகவை விமர்சிக்கப் பயன்படுத்தப்பட்டது. தற்போது அதே வார்த்தையை விஜய் கையில் எடுத்திருப்பது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.