கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதை எடப்பாடி பழனிசாமி, அவரின் டெல்லி ஓனர் தடுக்க நினைத்தாலும் முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று திமுக அரசு தெரிவித்தது. இதில் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தேர்தலை மனதில் வைத்து திமுக அரசு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் லேப்டாப்புகளின் தரமும் சரியில்லை என்று கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் நோக்கம் இதுதான்
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கல்லூரி மாணவர்களுக்கான லேப்டாப் திட்டத்தை முடக்க நினைப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி வெளியிட்ட அறிக்கையில், 'தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இப்போது ஏன் லேப்டாப் கொடுக்கிறீர்கள் என்ற எதிர்க்கட்சித்தலைவர் எழுப்பியுள்ள நோக்கம் என்ன என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் நன்றாக தெரியும்.
டெல்லி ஓனர் தடுத்தாலும் முடியாது
தமிழ்நாட்டு மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்ற பாசிச பாஜகவின் எண்ணத்தை, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சிக்கிறார். திராவிட மாடல் அரசு கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கத் தான் போகிறது. இதை எடப்பாடி பழனிசாமி அல்ல, அவர்களது டெல்லி ஓனர்கள் நினைத்தாலும் தடுக்க முடியாது. ஏதோ தேர்தலுக்காக திடீரென லேப்டாப் கொடுக்கப்படுகிறது போன்ற ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயல்கிறார்.
கதை விடும் கணினி நிபுணர் பழனிசாமி
2025-2026 நிதிநிலை கூட்டத்தொடரின் போதே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதாவது, "20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்று தெளிவாக நிதிநிலை அறிக்கையில் உள்ளது. "இன்றைய AI காலத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு இவர்கள் தரும் லேப்டாப் இல்லை," என்று எடப்பாடி பழனிசாமி சொல்லியிருக்கிறார். அவர் தமிழ்ப் புலவர் மட்டுமல்ல. அவர் சிறந்த Computer Expert என்பதும் இப்போது தான் தெரிந்தது. லேப்டாப் மாணவர்களின் கைக்குள் சேருவதற்கு முன்பே நம்முடைய 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி, லேப்டாப்பில் தொழில்நுட்பம் போதவில்லை - Configuration சரி இல்லை என்று கதைவிடுகிறார்.
நவீன தொழில்நுட்பங்களுடன் லேப்டாப்
கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் Battery என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் இருக்கிறது. அமெரிக்காவின் Perplexity Al நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Preplexity Pro Al வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
10 லட்சம் லேப்டாப்கள்
வரும் பிப்ரவரிக்குள் மாணவர்களுக்கு 10 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும். கலைஞர் ஆட்சியின்போது, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் பல வீடுகளில் இன்று வரை நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. எனவே, தொழில்நுட்பத்தைப் பற்றியும், தரத்தைப் பற்றியும் அக்கறைக் கொண்டவர் போல 'கணினி நிபுணர்' எடப்பாடி பழனிசாமி நடிக்கத் தேவையில்லை.
அதிமுக ஆட்சியில் பாதியில் கைவிடப்பட்டது
அ.தி.மு.க. ஆட்சியில் 2019-லேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு, மாணவர்களை ஏமாற்றியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி என்பதை நாடறியும். அதற்கு 2021-லேயே தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டினார்கள். எனவே, மாணவர்களுடைய கல்வி கனவை எப்படி சிதைக்கலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, எடப்பாடி பழனிசாமி வேறு ஏதாவது ஆக்கப்பூர்வமான அரசியல் பணிகளை செய்தால் நன்றாக இருக்கும். இல்லையெனில், தமிழ்நாட்டு மக்களும், மாணவர்களும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு நிச்சயம் உரிய பாடம் புகட்டுவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.


