Asianet News TamilAsianet News Tamil

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சிறுத்தை… நெல்லையில் பரபரப்பு!!

பாபநாசம் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

leopard was swept away in the flood in Nellai
Author
Nellai, First Published Nov 30, 2021, 4:19 PM IST

பாபநாசம் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பாபநாசம் சேர்வலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு நிலவரப்படி இரண்டு அணைகளுக்கும் வினாடிக்கு 13, 500 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதேபோன்று தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள கடனாநிதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் அங்கிருந்து 3000 ஆயிரம் கனஅடி நீர் வரை தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர், காற்றாட்டு வெள்ளம் என 20 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் செல்வதால் இன்று 5வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. வெள்ளநீர் ஆற்றங்கரைப்பகுதியில் உள்ள கோவில்கள், கல்மண்டபங்கள், தரைப்பாலங்கள் ஆகியவற்றை மூழ்கடித்துச் செல்கிறது.

leopard was swept away in the flood in Nellai

இந்த நிலையில் மழை வெள்ளம் காரணமாக நெல்லை கோடீஸ்வரன் நகர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு இருந்த நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் விரைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.  அதிகபட்சமாக மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் 91 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. சேர்வலாறு பகுதியில் 71 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 84 மில்லி மீட்டரும், அம்பாசமுத்திரம் பகுதியில் 83 மில்லி மீட்டரும் , சேரன்மகாதேவியில் 58 மில்லி மீட்டரும், நாங்குநேரி பகுதியில் 53 மில்லி மீட்டரும் , களக்காடு பகுதியில் 53 மில்லி மீட்டரும்  மழை பதிவாகியுள்ளது. மழை தொடர்ந்து நீடித்தால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெரும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோல நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்யா நகர், வடக்கு பாலபாக்யா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

leopard was swept away in the flood in Nellai

தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையெ பாபநாசம் வனப்பகுதியில் இருந்து 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இறந்த நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு பகுதியில் கரை ஒதுங்கியது. இதனை கண்ட பொதுமக்கள் அம்பாசமுத்திரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனை செய்து மணிமுத்தாறு அருகே காட்டுப்பகுதியில் சிறுத்தையின் உடலை எரியூட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுத்தை இயற்கை சீற்றத்தில் உயிர் இழந்ததா, அல்லது வேட்டையாடப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios