leave Andal matter and concentrate people problem - GK Vasan
புதுக்கோட்டை
"ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்தப் பின்னரும் இந்த விவகாரம் தொடர்கிறது. எனவே, இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள்" என்று புதுக்கோட்டையில் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் போராட்டத்தை அடுத்து, தற்போது தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது மக்களை ஏமாற்றும் செயல். ஏனெனில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தில் 50 சதவீதத்தையாவது குறைத்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் வார்டு மறுசீரமைப்பு செய்வதில் பல குளறுபடிகள் உள்ளது. எனவே முறையாக வார்டு மறுசீரமைப்பு செய்த பின்னர் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இதையும் மீறி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சித்தால் பலர் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும்.
ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்தப் பின்னரும், இந்த விவகாரம் இருதரப்பிலும் தொடர்ந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை அரசு மீன்பிடி தடை சட்டத்தை கொண்டு வந்து உள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசைக் கண்டித்து இந்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமல், ரஜினி இருவரும் தங்களது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளைத் தெரிவித்த பின்னர்தான், த.மா.கா. அவர்களை பற்றி விமர்சனம் செய்யும்.
மக்கள் நலனை பிரதிபலிக்கும் அரசாக மத்திய, மாநில அரசுகள் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.
