Lawyers to boycott the court work to get the stamp duty increases
கன்னியாகுமரி
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கான முத்திரைக் கட்டண உயர்வை திருமபப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்ட நடவடிக்கைக் குழு அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று நாகர்கோவில், இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை நீதிமன்ற வழக்கறிஞர்களும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்தப் போராட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது.
“நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கான முத்திரைக் கட்டண உயர்வை திருமபப் பெற வேண்டும்.
பிறப்பு - இறப்புகளை ஒரு வருட காலத்துக்குள் பதிவுச் செய்யப்படாமல் இருந்தால் அவற்றைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலமாக பதிவு செய்யப்பட்டு வந்ததை, தமிழக அரசு கோட்ட வருவாய் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் இளம் வழக்கறிஞர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசின் இந்த உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் நீதிமன்றன்ட்தில் இருந்து, டதி பள்ளி சந்திப்பு வழியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த ஊர்வலத்திற்கு கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர்கள் மகேஷ் தலைமை வகித்தார். குழித்துறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சுரேஷ், தக்கலை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மத்தியாஸ், இரணியல் போஸ், பூதப்பாண்டி சுரேஷ்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் செயலாளர்கள், நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த ஊர்வலம் ஆட்சியர் அலுவலக வாயிலைச் சென்றடைந்ததும் அங்கு கோரிக்கை விளக்க கூட்டம் நடைப்பெற்றது. அப்போது வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கைளை விளக்கிப் பேசினர்.
பின்னர், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் மகேஷ் தலைமையில் சில வழக்கறிஞர்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். அதன்பிறகு வழக்கறிஞர்கள் கலைந்துச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் நாகர்கோவில், இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை, பூதப்பாண்டி நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரத்து 200 பேர் கலந்து கொண்டாதாக கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மகேஷ் தெரிவித்தார்.
