sbi launched the mobile atm at thiruvallur

பாரத ஸ்டேட் வங்கியின் நடமாடும் ஏடிஎம் மைய சேவை வாகனம் திருத்தணி முருகன் மலைக் கோயிலில் அறிமுகப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்டது. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சேவை செய்ய சுற்றி வரும்.

திருத்தணி - சித்தூர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் வங்கிக் கிளை அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வங்கியின் கிளை மேலாளர் இலட்சுமணன் ராவ் தலைமை தாங்கினார். தலைமைப் பொது மேலாளர் ரமேஷ்பாபு வங்கியைத் திறந்து வைத்தார்.

பின்னர், முருகன் மலைக்கோயிலில், நடமாடும் (மொபைல்) ஏ.டி.எம். சேவை வாகனத் தொடக்க விழா நடைபெற்றது. தலைமைப் பொது மேலாளர் ரமேஷ்பாபு, கோயில் தக்கார் வே.ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது, தலைமைப் பொது மேலாளர் ரமேஷ்பாபு பேசியது:

“இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். பணமில்லாப் பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்துவதில், பாரத ஸ்டேட் வங்கிதான் முதலிடம் பிடித்துள்ளது.

தற்போது மொபைல் ஏ.டி.எம். மைய சேவை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சுற்றி வரும். வாடிக்கையாளர்கள் இதன் மூலம் பணமில்லாப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். பணத்தையும் எடுக்கலாம்.

எந்தெந்தப் பகுதியில் மொபைல் ஏ.டி.எம். மூலம் பணம் பெறுவது, அதிகளவில் நடைபெறுகிறதோ அந்த இடத்தைக் கண்டறிந்து அங்கு நிரந்தர ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

இதுதவிர, முருகன் மலைக்கோயில் பக்தர்கள் காணிக்கை செலுத்த டெபிட், கிரெடிட் கார்டுகள் இல்லாமல், இயந்திரம் மூலம் காணிக்கையைச் செலுத்தும் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.

பக்தர்கள் தங்களது காணிக்கை தொகையை பதிவு செய்தால் மட்டும் போதும். அந்த தொகை முருகன் கோயில் நிர்வாக கணக்கிற்குச் செல்லும்” என்று அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மலைக்கோயில் திருத்தணி பாரத ஸ்டேட் வங்கி சார்பில் ரூ.3 இலட்சத்து 60 ஆயிரம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமேலாளர் இந்துசேகர் தண்டு, மண்டலப் பொதுமேலாளர் புவனேஸ்வரி, திருத்தணி பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் வெங்கட்ரமணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.