Asianet News TamilAsianet News Tamil

தமிழக அரசியலை பார்த்து புதுடெல்லியில் கேவலமாக சிரிக்கிறார்கள் – அன்புமணி ராமதாசு கவலை…

Laughing on the politics of Tamilnadu laughing in New Delhi - Dhammani Ramadoss worry
laughing on-the-politics-of-tamilnadu-laughing-in-new-d
Author
First Published Apr 28, 2017, 8:24 AM IST


தமிழக அரசியலை பார்த்து புதுடெல்லியில் கேவலமாக சிரிக்கிறார்கள என்று சேலத்தில் நடந்த பா.ம.க. பொதுக் கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ராமதாசு கவலை அடைந்தார்.

உச்ச நீதிமன்றத்தின் மூலம் சாராயக் கடைகளை மூடுவதற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்த பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு சேலம் மாவட்ட பா.ம.க.சார்பில் பாராட்டு விழா மற்றும் பொதுக்கூட்டம் சேலம் அஸ்தம்பட்டியில் நேற்றிரவு நடந்தது.

இதற்கு மாநிலத் துணை பொதுச்செயலாளர் அருள் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கதிர்.ராசரத்தினம் வரவேற்றார். மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைத் தலைவர்கள் கார்த்தி, கண்ணையன், சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு, மாவட்ட செயலாளர்கள் சத்ரியசேகர், அண்ணாதுரை, மாநில மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் விஜயராசா போன்றோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது, பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசு பேசியது:

“சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி ராமதாசை அறிவித்து அவருக்கு ஒரு பேனாவையும் கொடுத்தேன். அப்போது, ஆட்சிக்கு வந்தவுடன் முதல் நாள் முதல் கையெழுத்தாக, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கான கையெழுத்து போட வேண்டும் என்று கூறினேன். தற்போது அதற்கான காலம் கனிந்து வருவதை உணரமுடிகிறது.

மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் மதுவிற்கு எதிராக போராடினார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் கடந்த 36 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக போராடி வருகிறேன்.

தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னணி தலைவர்கள்தான் தற்போது மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள். ஆனால் பா.ம.க.வோடு சேர்ந்து தி.மு.க.வும் மதுக்கடைகளை மூட சொல்லி வலியுறுத்தி வருகிறது.

தற்போது மூடப்பட்ட மதுக்களை திறப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகளை திறப்பதற்கு பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ம.க.ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தமிழகத்தை நாசமாக்கிவிட்டன. தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது. விரைவில் நல்லது நடக்கும்” என்று அவர் பேசினார்.

பின்னர் பேசிய அன்புமணி ராமதாசு, “உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டில் 3ஆயிரத்து 321 சாராயக் கடைகள் உள்பட இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து சாராயக் கடைகள் மூடிய பெருமை பா.ம.க.விற்கு உண்டு.

குறிப்பாக சொல்லப்போனால் தமிழ்நாட்டில் 60 சதவீதம் சாராயக் கடைகள் மூடுவதற்கு பா.ம.க.வே காரணம். மூடப்பட்ட மதுக்கடைகளை தெருக்களில் திறக்க விடாமல் பெண்கள் தற்போது போராடி வருகிறார்கள். இந்த கோபம் தேர்தலில் ஏன் வரவில்லை.

ஓட்டுக்கு ரூ.200, ரூ.300 வாங்கிக்கொண்டு மீண்டும் ஜெயலலிதாவை ஆட்சி அதிகாரத்தில் உட்கார வைத்தீர்கள். ஆனால் என்ன நடந்தது? என்று உங்களுக்கே தெரியும்.

சசிகலா பெங்களூரு சிறைக்கும், டி.டி.வி.தினகரன் டெல்லி சிறைக்கும் சென்றுவிட்டார்கள். தமிழகத்தில் நாள்தோறும் ஒரு நாடகம் நடக்கிறது. தமிழக அரசியலை பார்த்து புதுடெல்லியில் கேவலமாக சிரிக்கிறார்கள்.

தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு திராவிட கட்சிகளை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இளைஞர்கள் சுயமாக சிந்தித்தால் தமிழ்நாட்டில் நல்லது நடக்கும்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் பஞ்சத்தை போக்க நான் ஏராளமான திட்டங்களை வைத்திருக்கிறேன்.

நல்லது யார் செய்வார்கள்? என்று பார்த்து வாக்களிக்க வேண்டும். மக்கள் சிந்திக்க தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று பேசினார்.

இந்தக் கூட்டத்தில், சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் சாம்ராஜ், மாவட்ட துணை செயலாளர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், மதுவை ஒழித்து தமிழக பெண்களின் தாலியை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பெண்ணின் கழுத்தில் தாலி தொங்குவது போன்ற நினைவு பரிசை சேலம் மாவட்ட பா.ம.க.நிர்வாகிகள் சார்பில் மருத்துவர் ராமதாசிடம் வழங்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios