இடைப்பாடி,

இடைப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி பயங்கரமாக மோதியதில் கணவன், மனைவி, இரண்டு மகன்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் வெங்கடேசன் (42). இவர் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சுகுணா (35). இவர்களுக்கு தஸ்வந்த் (8), ஹரிபிரசாத் (7) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். வேலை காரணமாக வெங்கடேசன் ஈரோட்டில் உள்ள காவல் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்

இந்த நிலையில் புத்தாண்டையொட்டி அவர் தனது மனைவி, இரண்டு மகன்களை அழைத்துக் கொண்டு தந்தை கோவிந்தனை பார்ப்பதற்காகச் சொந்த ஊரான கள்ளிக்காட்டுக்கு வந்தார்.

நேற்று மாலை அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் மனைவி, இரண்டு மகன்களுடன் வெங்கடேசன் ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இடைப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள எட்டிக்குட்டைமேடு என்ற இடத்தில் இரவு 7 மணியளவில் அவர்கள் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே கொங்காணபுரத்தில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காவலாளர் வெங்கடேசன், அவருடைய மகன்கள் தஸ்வந்த், ஹரிபிரசாத் ஆகிய மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுகுணாவை மீட்டு அவசர ஊர்தியில் ஏற்ற முயன்றனர். ஆனால், அவசர ஊர்தியில் ஏற்றும்போதே அவரும் பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், சங்ககிரி உதவி ஆட்சியர் பால்பிரின்சிலி ராஜ்குமார், துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், இடைப்பாடி தாசில்தார் சண்முகவள்ளி மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர், விபத்தில் பலியான நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களின் உடல்களை பார்க்க வந்த உறவினர்கள் கதறி அழுததில், அந்த இடம் முழுவதும் சோகக் கடலில் மூழ்கியது.

மேலும், இந்த விபத்து குறித்து இடைப்பாடி காவல் மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

புத்தாண்டையொட்டி தந்தையை பார்க்க வந்த காவலாளர், தனது மனைவி மற்றும் மகன்களுடன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.