மாமல்லபுரம் கடலில் ஆர்ப்பரிக்கும் ராட்சத அலையில் சிக்கி, மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் லோசகவும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால், சாலையில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

நேற்று தீபாவளி பண்டிகையையொட்டி அனைத்து பகுதிகளிலும் ஏராளமானோர், பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில், டன் கணக்கில் குப்பைகள் நகர் முழுவதும் சேர்ந்துள்ளது. இதனால், மழைநீர் செல்ல வழியில்லாமல், கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று இரவு முதல லோசன மழை பெய்து வருகிறது. ஆனால், காற்று பலமாக வீசுகிறது. இதையொட்டி நேற்று கடற்கரையில் கட்டி வைக்கப்பட்ட, மீனவர்களின் படகுகள் பலத்த காற்றினால், ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன. அதில், 5 படகுகள் பலத்த சேதமானது.

மேலும், கடலில் சீற்றம் ஏற்பட்டு, ராட்சத அலைகள் உருவாகி வருகிறது. இதனால், கடற்கரையில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையும் மீறி சுற்றுலா சென்றுள்ள சிலர், கடலில் இறங்கி குளிக்க முயற்சிக்கின்றனர். அவர்களை, அங்குள்ள போலீசாரும், மீனவ மக்களும் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர்.