கூடலூர் அருகே வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு காவலாளர்கள், வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை கண்டுப்பிடித்தே தீருவோம் என்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

கடந்த டிசம்பர் மாதம் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிலம்பூர் வனத்தில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் கும்பலை கேரளாவின் தண்டர்போல்ட் அதிரடிப்படை காவலாளர்கள் துப்பாக்கியால் சுட்டதில் குப்புசாமி, அஜிதா ஆகிய இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டனர்.

மீதமுள்ள நபர்கள் வனப்பகுதியில் தப்பி ஓடினர். அவர்களை பிடிக்கும் பணியில் தமிழக – கேரள காவலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர், பந்தலூர் தாலுகா வனப்பகுதியில் தமிழக நக்சல் தடுப்பு பிரிவு காவலாளர்கள் முகாமிட்டு மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் உள்ள எல்லமலை, சீபுரம், பெரியசோலை உள்ளிட்ட வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் வல்லவன், உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் நியூகோப் சிறப்பு காவலர் தாஜூதீன் உள்ளிட்ட காவலாளர்கள் நேற்று சுற்றுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி மக்களை காவலாளர்கள் சந்தித்து வனப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் உள்ளதா? என விசாரித்தனர். இதற்கு ஆதிவாசி மக்கள் இல்லை என்றுத் தெரிவித்தனர்.

பின்னர் வனப்பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று காவலாளர்கள் கேட்டனர். அதற்கு ஆதிவாசி மக்களும் தெரிவிப்பதாக உறுதி அளித்தனர்.

பின்னர் காவலாளர்கள் வனப்பகுதியில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், வனப்பகுதியில் மர்ம நபர்கள் தங்கி இருந்ததற்கான எந்த தடயங்களும் காணப்படவில்லை என காவலாளர்கள் விளக்கம் அளித்தனர்.