Asianet News TamilAsianet News Tamil

நடுரோட்டில் ஒப்பாரி வைத்து போராட்டம் - மத்திய அரசுக்கு எதிர்ப்பு

lamenting struggle-public
Author
First Published Nov 25, 2016, 12:38 PM IST


ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து, நடுரோட்டில் உட்கார்ந்து ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 50க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதனால், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதிகாலை முதல் ஏடிஎம் மற்றும் வங்கிகளின் வாசலில் கால் கடுக்க காத்திருந்து, பணத்தை மாற்றுகின்றனர். இதில் பலருக்கு பணம் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதையொட்டி குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்து வடசென்னை மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மூலகொத்தளம் பஸ் நிலையத்தில் ஒப்பாரி போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

அப்போது, வாலிபர் ஒருவரை சடலம் போன்று மாலை போட்டு அலங்கரித்து தூக்கி வந்து, சாலையில் போட்டு ஒப்பாரி வைத்து அழுதனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து ஏழுகிணறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டு ஒப்பாரி போராட்டம் நடத்திய பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios