- Home
- Tamil Nadu News
- எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..? அருமை அண்ணன் இபிஎஸ்..! ஓ.பன்னீர்செல்வம் பளீர் பேட்டி
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..? அருமை அண்ணன் இபிஎஸ்..! ஓ.பன்னீர்செல்வம் பளீர் பேட்டி
நான் அதிமுகவில் இணையத் தயார், அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தயாரா என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பின்னர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவது நோக்கமல்ல
முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது என தனது ஆதரவாளர்களுடன் தேனியில் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை உருவாக்கவில்லை. எங்களது பலத்தை நிரூபிக்கவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோம்.
எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா..?
மேலும் திமுகவில் இணைவதாகவோ, வேறு கூட்டணியில் இணைவது தொடர்பாகவோ நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் ஊடகங்கள் பொய்யான தகவலை வெளியிடுகின்றன. எங்களைப் பார்த்தால் உங்களுக்கு பாவமாக இல்லையா..?
ஒன்றுபட்ட அதிமுக வேண்டும். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்கள் சட்டப் போராட்டம். நாங்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேண்டுமென டிடிவி தினகரன் வலியுறுத்துகிறார். நட்பின் அடிப்படையில் அவர் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதிமுகவில் சேர்க்க டிடிவி வலியுறுத்த வேண்டும்..!
அதே போன்று மீண்டும் அதிமுகவில் இணைய நான் தயார். அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தயாரா..? டிடிவி தினகரன் நினைத்தால் அது நடக்கும். எங்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன், பழனிசாமியிடம் வலியுறுத்துவாரா? என்று கேள்வி எழுப்பினார்.
தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் தான்
மேலும் இரண்டாம் கட்ட தர்மயுத்தம் நடத்த என்னை வலியுறுத்தியதே வைத்திலிங்கமும், மனோஜ் பாண்டியனும் தான். அவர்கள் சொன்னதன் அடிப்படையிலேயே இரண்டாம் கட்ட தர்மயுத்தத்தை மேற்கொண்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

