lakes are filling by rain
வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. காலை சிறிதுநேரம் நின்றிருந்த மழை மீண்டும் தொடங்கி பெய்துவருகிறது.
கனமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 900-க்கும் அதிகமான ஏரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஏரிகளில் 2 நாட்களுக்கு முன்பு வரை தண்ணீர் இல்லாமல் இருந்தன.
நேற்று பெய்த கனமழையால், இவற்றில் 66 ஏரிகள் நிரம்பிவிட்டதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்திலேயே 66 ஏரிகள் நிரம்பிவிட்டன. மேலும் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மீதமுள்ள ஏரிகளும் விரைவில் நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏரிகள் நிரம்புவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்நிலைகள் நிரம்பினால் விவசாயத்திற்கான நீராதாரம் கிடைத்துவிடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில், அதிகனமழை பெய்து ஏரிகள் நிரம்பினாலும் ஆபத்து என்பதால் சிறிது பீதியும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
