Ladies arrested for cannabis by train 64 kg confiscated worth Rs.6 lakh
ஈரோடு
தன்பாத் விரைவு இரயிலில் பண்டல் பண்டலாக 64 கிலோ கஞ்சா கடத்திய மூன்று பெண்களை ஈரோடு காவலாளர்கள் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 இலட்சத்து 40 ஆயிரம் இருக்குமாம்.
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் விரைவு இரயிலில் கஞ்சா கடத்தப்படுகிறது என்று சேலம் இரயில்வே பாதுகாப்பு படை காவலார்களுக்கு நேற்று இரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டக் காவல் ஆய்வாளர் சம்பத் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் முரளி, மதுசூதனரெட்டி மற்றும் காவலாளர்கள் தன்பாத் விரைவு இரயில் சேலம் இரயில் நிலையம் வந்தபோது இரயிலில் ஏறினார்கள்.
அவர்கள் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தியபோது பொதுப்பெட்டியில் மூன்று பெண்கள் 9 பைகள் வைத்திருந்தனர். அவர்கள் அருகில் சென்ற காவலாளர்கள் அந்த பெண்களிடம் இருந்த பைகளை வாங்கி திறந்து பார்த்தனர்.
அப்போது பைக்குள் ஏராளமான பண்டல்கள் இருந்தன. அந்த பண்டல்களை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்ததை கண்டனர்.
இதனிடையே தன்பாத் இரயில் ஈரோடு இரயில் நிலையம் வந்ததால் காவலாளர்கள் அந்த மூன்று பெண்களையும் ஈரோடு இரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள மாயம்குரும்பட்டி பகுதியைச் சேர்ந்த பாப்பா (40), ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள வின்னுகோபால் பட்டணம் பகுதியைச் சேர்ந்த கொலுசுலட்சுமி (45), விசாகப்பட்டினத்தை அடுத்த தாஜ்ஜில் பகுதியை சேர்ந்த பானுமதி (35) என்பது தெரிய வந்தது.
மேலும், இவர்கள் மூவரும் விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பூருக்கு இரயில் மூலம் 64 கிலோ கஞ்சாவை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மூவரையும் ஈரோடு இரயில்வே பாதுகாப்பு படை காவலாளர்கள், ஈரோடு இரயில்வே காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு இரயில்வே காவலாளர்கள் வழக்குப்பதிந்து, பாப்பா, கொலுசுலட்சுமி, பானுமதி ஆகிய மூவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 64 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.6 இலட்சத்து 40 ஆயிரம் இருக்குமாம்.
