Asianet News TamilAsianet News Tamil

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டில் ரூ.2 கோடி மோசடி...

Kumbakonam school fires 2 crore fraud in compensation to victims
Kumbakonam school fires 2 crore fraud in compensation to victims
Author
First Published May 1, 2018, 7:04 AM IST


தஞ்சாவூர்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையில் ரூ.2 கோடியே 30 இலட்சத்தை மோசடி செய்த வழக்கறிஞர் மீது சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் வழக்குப்பதிந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2004-ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்கள். பலர் பலத்த காயம் அடைந்தனர். 

படுகாயம் அடைந்தவர்களில் கும்பகோணம் சத்திரம் கருப்பூர் மெயின் சாலை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் திவ்யாவும் ஒருவர். தற்போது இவருக்கு 22 வயது ஆகிறது. இவர் தஞ்சை சி.பி.சி.ஐ.டி. துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், "கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த காயம் அடைந்து உயிர் தப்பியவர்களில் நானும் ஒருவர். என்னைப்போல் முகத்தில் தீக்காயம் அடைந்தவர்களுக்கும், உயிர் இழந்தவர்களின் குடும்பத்தாருக்கும் இழப்பீடு கிடைப்பதற்கு நீதிமன்றம் மூலமாக முயற்சி மேற்கொண்டோம். 

அப்போது, எங்களைப்போல் பாதிக்கப்பட்ட இன்பராஜ் என்பவர் மூலமாக சென்னை கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் விஜயரெங்கன் தெருவை சேர்ந்த வழக்கறிஞர் தமிழரசன் அறிமுகமானார். அவர் நீதிமன்றம் மூலமாக உரிய இழப்பீட்டை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மனிதநேயத்துடன் நியாயமாக செயல்பட்டு பெற்று தருவதாக கூறினார்.

அதன்படி தகுந்த இழப்பீட்டு தொகை பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு செலவிற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.3 இலட்சத்து 50 ஆயிரத்தை வழக்கறிஞர் தமிழரசன் பெற்றுக் கொண்டார். 

இந்த வழக்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்பட்டு, உயிரிழந்த 94 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 இலட்சம், பலத்த காயம் அடைந்த குழந்தைகளில் 3 பேருக்கு தலா ரூ.6 இலட்சம், நான் உள்பட 3 பேருக்கு தலா ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த தொகையுடன் 12 ஆண்டுகளுக்கான வட்டியை கணக்கிட்டு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, எங்களுடைய வங்கி கணக்குகளில் இழப்பீட்டு தொகை டெபாசிட் செய்யப்பட்டது. இதனிடையே வழக்கறிஞர் தமிழரசன் எங்களிடம் இரண்டு வெற்று காசோலைகளிலும், வெற்று பேப்பரிலும் கையெழுத்து பெற்றிருந்தார். 

அதன்பிறகு எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.2.30 இலட்சத்தை காசோலை மூலம் தமிழரசன் எடுத்துக் கொண்டார். பணத்தை எடுத்துக் கொண்ட தகவலை தமிழரசன் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.

மொத்தம் 100 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 கோடியே 30 இலட்சத்தை அவர் எடுத்து கொண்டார். இழப்பீடாக கிடைத்த தொகையில் இருந்து எங்களிடம் கேட்காமல் பணத்தை எடுத்து அவர் மோசடி செய்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கறிஞர் தமிழரசன் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி சி.பி.சி.ஐ.டி காவலாளர்களுக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி உத்தரவிட்டது. 

அதன்படி வழக்கறிஞர் தமிழரசன் மீது சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios