திருவண்ணாமலை அருள்மிக அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், கடந்த 2002ல் நடந்தது. இதையடுத்து, மீண்டும் மஹா கும்பாபிஷேகம் நடத்த 50 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2015 ஜனவரி 26 முதல் திருப்பணிகள் நடந்து வந்தன.

2016 நவம்பர் 20ல், கும்பாபிஷேக பந்தக்கால் நடப்பட்டு கடந்த 26ம் தேதி துர்க்கையம்மன் உற்சவத்துடன் கும்பாபிஷேகம் தாெடங்கியது. யாக சாலையில் 108 குண்டங்கள் அமைத்து 1,008 கலசம் வைத்து பூஜை நடத்தப்பட்டது.

கடந்த 2ம் தேதி முதல்கட்டமாக பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இன்று ராஜகோபுரம், மூலஸ்தானம், அபிதாகுசாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் விமானம் மற்றும் மூலவர் உள்பட 59 சன்னதிகளுக்கு ரோகிணி நட்சத்திரத்தில், இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது.

இதை முன்னிட்டு, அதிகாலை, 3 மணிக்கு, 12ம் கால யாக பூஜை, 5 மணிக்கு பூர்ணாஹூதி 6 மணிக்கு பரிவார யாகசாலை விமான கலசங்கள் புறப்பாடு, சுவாமி அம்மன் யாகசாலை மஹா பூர்ணாஹூதி, 7 மணிக்கு யாத்ராதானம், 7 மணிக்கு கலச புறப்பாடு, 9.15 மணிக்கு ராஜகோபுரம் உள்பட ஒன்பது கோபுரங்கள் மற்றும் மூலஸ்தானம் அபிதகுசாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு நடந்தேறியது.

மேலும் இன்று மாலை, 4.30 மணிக்கு சுவாமி அம்மன் மஹா அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம், இதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. விழாவையொட்டி, 8,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவில் வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.