Asianet News TamilAsianet News Tamil

அதிகாரிகளின் அலட்சியத்தால் நாசமாய் போன குடகனாறு அணை; காப்பாத்த இப்பவும் ஒரு வாய்ப்பு இருக்கு…

Kudakanaru Dam which was destroyed by the negligence of the officers There is a chance to save ...
kudakanaru dam-which-was-destroyed-by-the-negligence-of
Author
First Published May 11, 2017, 7:09 AM IST


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 44 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்ட குடகனாறு அணை வண்டல் மண் சூழப்பட்டு நாசமாய் போனது. இதனை தூர்வார வேண்டும் என்றும், வறட்சி நிலவுவதால் தூர்வார இதுவே சரியான தருணன் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்கு அடிவார பகுதியில் தொடங்குகிறது குடகனாறு. அங்கிருந்து ஆத்தூர், திண்டுக்கல் வழியாக வேடசந்தூர் செல்கிறது. பின்னர், இந்த ஆறு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா வழியாக 109 கிலோ மீட்டர் கடந்து, மூலப்பட்டி என்ற இடத்தில் அமராவதி ஆற்றில் சேர்கிறது.

சிறுமலையில் உருவாகும் சந்தானவர்த்தினி ஆறு மற்றும் மாங்கரையாறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகளும் குடகனாற்று நீர்வரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் மிகவும் வறட்சியான பகுதி. இதனால் அந்த பகுதியில் வறட்சியை போக்க குடகனாற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரியில் கடந்த 1973–ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் கருணாநிதியால் 5 அடைப்பான்கள் கொண்ட புதிய அணை கட்டப்பட்டது.

அணைக் கட்டப்பட்டு திறக்கப்படாத நிலையில், 1977–ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தில் அணை உடைந்தது. இதன் பின்னர் ரூ.10 கோடியே 20 இலட்சம் செலவில் பழைய 5 அடைப்பான்கள் பழுதுபார்க்கப்பட்டது.

மேலும், கூடுதலாக 10 அடைப்பான்களுடன் புதிய அணை கட்டப்பட்டது. இதனை 1994–ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார். அதன்படி அணையில் மொத்தம் 15 அடைப்பான்கள் உள்ளன.

அணை கட்டிய பின்பு முதன்முதலாக கடந்த 2005–ஆம் ஆண்டு நிரம்பியது. இந்த அணை மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 3663 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில் 5337 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகின்றன.

இதில் வலது மற்றும் இடது முக்கிய கால்வாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கல்வார்பட்டி, பாலப்பட்டி, கூம்பூர், ஆர்.வெள்ளோடு, திருக்கூர்ணம், கரூர் மாவட்டத்தில் பெரிய மஞ்சுவளி, ஈசநத்தம், அம்மாபட்டி ஆகிய கிராம விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2007–ஆம் ஆண்டு பெய்த கனமழையினால் டிசம்பர் மாதம் 21–ஆம் தேதி அணையில் மொத்த உயரமான 27 அடியில் 25 அடி வரை தண்ணீர் நிரம்பியது.

மேலும், அதிகமான மழை வெள்ளம் வந்ததால் அணையில் இருந்த பழைய அடைப்பான்களில் முதலாவது அடைப்பான் உடைந்தது. இந்த அடைப்பான் 200 அடி தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டதன் காரணமாக அணையில் தேங்கியிருந்த 25 அடி நீரும் வீணாக வெளியேறியது.

இதனையடுத்து அணையில் உள்ள 5 பழைய அடைப்பான்களை முழுவதும் மாற்றவேண்டும் என்று விவசாயிகள் கோரிககை விடுத்தனர். அதன்பேரில் தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 25 இலட்சம் ஒதுககீடு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து அடைப்பான்களுக்குள் நீர்வராமல் தடுக்க அணையின் உட்பகுதியில் அடைப்பான்களுக்கு முன்பு 10 அடி உயரமுள்ள கரை அமைககப்பட்டது.

2012–ஆம் ஆண்டு 18 அடி தண்ணீர் மட்டுமே இருந்ததால் மக்களின் குடிநீர் தேவைக்காக நீர் தேக்கி வைக்கப்பட்டது. அணை திறக்கப்படவில்லை. கடந்த 2014–ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் அணையில் 20 அடிக்கு மேல் நீர் தேக்கப்பட்டது. ஆனால், அடைப்பான்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் நீர் கசிவு ஏற்பட்டது. அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையால் 2014–ம் ஆண்டும் அணையில் முழுமையாக தண்ணீர் தேக்க முடியவில்லை.

கடந்த 2015–ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 25 இலட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் மழைக் காலங்களில் அணைக்கு அதிகப்படியான வெள்ளநீர் வந்தால் தானாக நீர் வெளியேறும் வகையில் அணையின் மேற்குப்பகுதியில் 250 மீட்டர் நீளமுள்ள கரைகள் அகற்றப்பட்டன.

மேலும் அதிகப்படியான வெள்ளநீர் வெளியேறும்போது அணைப்பகுதியில் உள்ள மற்றொரு கரை பாதிக்காத வகையில் 1 முதல் 3 அடி வரை தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.

இந்த திட்டத்தினால் அணைக்கு அதிகளவு வெள்ளநீர் வந்தால் தானாக வெளியேறும் நீர் அணையின் முன்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று கிராம மக்களும், விவசாயிகளும் அச்சத்தோடு உள்ளனர்.

கடந்த 2015–ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது அணையில் 25 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. அதன்பிறகு விவசாய பாசனத்திற்காக வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில், 2016–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.81 இலட்சம் மதிப்பீட்டில் அணையில் உள்ள வாய்க்கால் இரு மதகுகளின் அடைப்பான்களை மாற்றுவதற்கும், 5 பழைய அடைப்பான்களை பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றது. இதற்காக அணையில் இருந்த 9 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சரியான மழை பெய்யாததால் அணை வறண்டது. குடகனாறு தொடங்கும் இடம் முதல் முடிவு வரை ஆற்றின் இரு பகுதியிலும் சீமைக்கருவேல மரங்கள் ஏராளமாக உள்ளன. இந்த மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

மக்கள் கோரிக்கை:

திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி குடகனாற்றின் ஓரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்ற பொதுப்பணித்துறை – நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குடகனாறு அணை கட்டப்பட்டு 44 ஆண்டுகள் ஆன நிலையில் அணையின் உட்பகுதியில் வண்டல்மண் அதிகளவு படிந்து உள்ளது. சுமார் 3 அடி அளவுக்கு வண்டல் மண் படிந்துள்ளதால் தண்ணீர் தேக்கும் அளவு குறைந்துள்ளது. தற்போது அணை வறண்டு உள்ளதால் தூர்வாருவதற்கு இதுவே நல்ல வாய்ப்பாகும்.

மேலும் புதிய அடைப்பான்கள் அமைத்து முறையாக பராமரித்தால் ஆண்டு முழுவதும் தேவையான தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதன்மூலம் அணையை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணை நீரை வேடசந்தூர் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தலாம்.

எனவே அணையை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios