கிருஷ்ணகிரியில் கோர விபத்து.. லாரி மோதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடல் நசுங்கி பலி!
சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் அவ்வப்போது பல சாலை விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் திடீரென சாலையின் குறுக்கே வந்த கால்நடையை மோதாமல் தவிர்க்க இரு சக்கர வாகனத்தை திருப்பியபோது, அருகே வந்த லாரி மோதியதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் தான் முகிலன் மற்றும் கந்திலி அருகே கஜல் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண் தான் பாரதி. இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள பர்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று முகிலன் மற்றும் பாரதி ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் பெங்களூர் ஆகிய மூன்று சாலைகளை இணைக்கக்கூடிய ஆவின் மேம்பாலம் அருகே இவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திடீரென சாலை ஓரத்தில் இருந்து மாடு, சட்டென்று சாலை நடுவே வந்துள்ளது.
இதையும் படியுங்கள் : செந்தில் பாலாஜி வழக்கு.. மனைவி மேகலா தாக்கல் செய்த மனு.. நாளை வரை வழக்கு ஒத்திவைப்பு - ஏன்?
இதனை கண்ட முகிலன் இருசக்கர வாகனத்தை மாட்டின் மீது மோதாமல் தடுக்கும் வகையில் வலது பக்கத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளார், அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. வண்டியில் இருந்து நிலைதடுமாறி விழுந்த இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியது.
இந்த விபத்தில் முகிலன் மற்றும் பாரதி ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற கிருஷ்ணகிரி போலீசார் இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளால் அவ்வப்போது பல சாலை விபத்துகள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகின்றது. இதனை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : மதிமுகவில் இருந்து மார்க்கோனி நீக்கப்பட்ட விவகாரம் - அக்கட்சி பொறுப்பாளர்கள் 28 பேர் திடீர் ராஜினாமா!