Krishnagiri collector warning take actions against parents who doing child marriage

கிருஷ்ணகிரி

குழந்தை திருமணம் செய்தால் பெற்றோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது என்றும் கிருஷ்ணகிரி ஆட்சியர் எச்சரித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சாமந்தமலை கிராமத்தில் மே தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. 

இதில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாதது குறித்தும், கழிப்பறை இல்லாத வீடுகள் விவர பட்டியல், திறந்தவெளி மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் பயன்படுத்துதல்.

பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள் பயன்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை மற்றும் முதல்- அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், ஏரி, குளங்கள் தூர்வாருதல், நீர் ஆதார அமைப்புகளை புனரமைத்தல், 

இயற்கை வள மேலாண்மை பணிகள், சிறு, குறு நீர்பாசன கால்வாய்களை உருவாக்குதல், பொது நிலங்களில் நில மேம்பாட்டு பணிகள், மற்றும் பிரதான் மந்திரி காப்பீடு திட்டங்களில் பயனாளிகள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் கதிரவன், "பாரத பிரதமரின் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 இலட்சம் வரை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள பயனாளிகள் தங்களுடைய ஆதார் எண், குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்களை வழங்கி இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.

பாரத பிரதான் மந்திரியின் சுரக்‌ஷா பீம யோஜனா திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் ரூ.12 பிரிமியம் செலுத்தியும், மற்றும் பாரத பிரதமரின் ஜீவன் ஜோதி பீம யோஜனா காப்பீடு திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 50 வயது வரை ரூ.330 பிரிமியம் செலுத்தி குடும்ப உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் இந்த காப்பீடு திட்டங்களில் கிராம மக்கள் சேர்ந்து பயன்பெற வேண்டும்.

கிராமப்புறங்களில் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீட்டின் அருகே இடம் இல்லாதவர்களுக்கு பொது இடங்களில் தனியாக கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு வருகிறது. 

மக்கள் சுகாதாரத்தை கடைபிடிக்கும் வகையில் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் வெயில் அதிகமாக உள்ளதால் தண்ணீர் பருக வேண்டும். காலை 11 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், 18 வயது பூர்த்தியாகாத பெண்களுக்கு திருமண செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு குழந்தை திருமணம் பற்றி கண்டறிந்தால் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யக் கூடாது. எனவே, மக்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறினார்.

இ்ந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், ஊராட்சி உதவி இயக்குனர் சுசீலா ராணி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மரியம் சுந்தர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார் கன்னியப்பன், தனி தாசில்தார் பாலசுந்தரம், 

துணை தாசில்தார் சத்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, இந்துமதி, ஒன்றிய பொறியாளர்கள் மணிவண்ணன், சாஸ்தா, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், ஊராட்சி செயலர் முருகன், மற்றும் ஊர்பொதுமக்கள் பங்கேற்றனர்.