கிருஷ்ணா நதிநீர் ...  சந்திரபாபு நாயுடுவுடன் ஓபிஎஸ் இன்று பேச்சவாா்த்தை!

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறாா். 

கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி, சென்னை குடிநீருக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீரை இரண்டு கட்டங்களாக ஆந்திரா திறந்துவிட வேண்டும். பெரும்பாலும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்காததால், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. 

ஆந்திர மாநில விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் எடுப்பதால் பெரும்பாலும் மிகக் குறைந்த அளவே வந்து சேருகிறது. 

இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால், ஏரிகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. சந்திரபாபு நாயடுவுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் வடபகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஆந்திராவிடம் இருந்து கிருஷ்ணா நதிநீரைப் பெறுவது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் பன்னீர்செல்வம் இன்று ஆந்திரா செல்கிறாா்.

ஆந்திர தலைநகர் அமராவதியில் இன்று பிற்பகல் நடைபெறும் பேச்சுவார்த்தையில், தமிழகத்திற்கு கூடுதல்நீரைத் திறந்துவிட அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.