திமுக அரசின் ஊழலுக்கு எதிராக சேலத்தில் பாஜக மாநாடு நடத்த உள்ளது. டாஸ்மாக் ஊழல், இந்தி திணிப்பு நாடகங்கள் என ராமலிங்கம் குற்றச்சாட்டு.
Tamil Nadu Tasmac scam : பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சேலம் பெருங்கோட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக அரசின் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய மாநாடு சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் தேசிய தலைவர்களும் மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொள்ள உள்ளனர். அடுத்ததாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாளை டாஸ்மாக் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த மாபெரும் ஊழலுக்கு எதிராக திமுகவுக்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளும் எங்களுடன் இணைந்து போராட அழைப்பு விடுகிறோம்.

டாஸ்மாக் 50ஆயிரம் கோடி ஊழல்
திமுக கூட்டணியில் நியாயமான சிந்தனை உள்ள ஊழலுக்கு எதிரான கட்சிகளும் எங்களுடன் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். திமுக தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்து மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு என பல்வேறு நாடகங்களை திமுக நடத்தி வருகிறது. மாநில உரிமைக்காக போராடுகிற கூட்டம் திமுக அல்ல என கூறினார்.
டாஸ்மாக் மூலம் ஒரே துறையில் மூன்று ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்திருப்பது மிகப்பெரிய சாதனையாக உள்ளது. தோண்ட தோண்ட பூதம் கிளம்புவது போல எந்த பக்கம் திரும்பினாலும் ஆச்சரிய படத்தக்க வகையில் டாஸ்மாக் ஊழல் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
கீழே உள்ள அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியும், முதலமைச்சரும் இதிலிருந்து தப்பி விட முடியாது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களில் 60% மட்டுமே வரி விதிப்புக்கு உட்படுத்தப்படுகிறது. 40 சதவீதம் எந்தவித வரி விதிப்புக்கும் உட்படாமல் ஊழல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட பணம் தமிழக முழுவதும் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அனுப்பப்பட்டு விட்டத ஓட்டுக்கு 2000 ரூபாய் வரை தர திமுகவினர் தயாராக இருக்கிறார்கள்.

தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய்
தமிழகத்தில் முதலமைச்சருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது வழக்கு போடப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பிரதமருக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. மத்திய அரசு எல்லா விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு தான் உள்ளது. விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் அரசை நடத்தும் தகுதியும் திமுகவிற்கு இல்லையென தெரிவித்தார்.
