சென்னை கோட்டூர்புரம் அறிவியல் மையம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட உள்ளது. STEM கல்வி, விண்வெளி அறிவியல் மற்றும் கடல் உயிரியல் தொடர்பான மேம்பட்ட கண்காட்சிகள் இடம்பெறும்.
ஒரு காலத்தில் கல்விச் சுற்றுலாவுக்கு முக்கிய இடமாகத் திகழ்ந்த சென்னை கோட்டூர்புரம் அறிவியல் மையம், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக தனது பொலிவை இழந்துள்ளது. இந்நிலையில் தற்போது அதனை புனரமைத்து புதுபொலிவுடன் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, 22 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த மையம் அறிவியல் கல்வி மற்றும் புதுமைகளுக்கான மையமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் பெரிய மேம்பாட்டுத் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படவுள்ளது.
கோட்டூர்புரம் அறிவியல் மையம்
அறிவியல் அறிவை மேம்படுத்துவதையும், பல்வேறு தொழில்துறைகளுக்கு இடையே ஒத்துழைப்பை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு 1988இல் இந்த மையம் நிறுவப்பட்டது. இதற்கு ஒரு புதிய பொலிவைக் கொடுக்கும் முயற்சியில், சிங்கப்பூர் அறிவியல் மையம், தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
இந்தத் திட்டத்தின் கீழ் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகள், விண்வெளி அறிவியல் மற்றும் கடல் உயிரியல் ஆகியவற்றில் மேம்பட்ட மெய்நிகர் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (Virtual and Augmented Reality) கண்காட்சிகள் இடம்பெறும்.
மேலும், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா, ஒரு உயர் சக்தி வாய்ந்த வானியல் தொலைநோக்கி, ஆழ்கடல் மற்றும் விண்வெளி சூழல்களை உருவகப்படுத்தக்கூடிய டிஜிட்டல் திரையரங்குகள் ஆகியவையும் இடம்பெறும்.
இது தவிர, வானியல் விளக்கக்காட்சிகளை மேம்படுத்தும் வகையில், டிஜிட்டல் ப்ரொஜெக்ஷன் சிஸ்டம் (Digital Projection System) உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக வசதிகள் மேம்படுத்தப்படும். பெரியார் காட்சிக்கூடம், கடல் காட்சிக்கூடம், இதய அருங்காட்சியகம் மற்றும் ராமானுஜன் கணிதக் காட்சிக்கூடம் போன்ற ஆகியவை புதுப்பிக்கப்படும்.
வளாகத்தில் புதிய கற்றல் மண்டலங்கள், கிரகங்கள் சார்ந்த பொழுதுபோக்கு பகுதி, பசுமை மண்டலங்கள், நடைபாதைகள், இருக்கை வசதிகள், அறிவியல் சார்ந்த பொது நிகழ்வுகளுக்கான வெளிப்புற ஆம்பிதியேட்டர் போன்றவை இந்தத் திட்டத்தின் கீழ் வருகின்றன.
கல்வியாளர்கள் கோரிக்கை
80 அடி 3D விண்வெளி திரையரங்கம், அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றத்தை விளக்கும் காட்சிக்கூடங்கள், பெரிய டைனோசர் மாதிரிகள் ஆகியவற்றையும் அமைத்தால் மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் அறிவியல் மையத்திற்கு வரவைக்க முடியும் என கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
