நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய அம்மாநில போலீஸ் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கர்ணன். இவர் கடந்த ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக புகார் கூறி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம், தானாகவே நீதிபதி கர்ணன் மீது,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது.இந்த வழக்கில் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில்  ஆஜரானார்.

அப்போது, மே 5ஆம் தேதி நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து மருத்துவ பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு மனநிலை பரிசோதனை செய்ய வேண்டும் என டெல்லி டிஜிபிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் பதிலுக்கு உத்தரவிட்டார்.மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நீதிபதிகள் ஆஜராகவில்லை என்பதால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜகதீஸ் சிங் கெஹர், தீபக் மிஸ்ரா, ஜலமேஷ்வர், ரஞ்சன் கோகை, மதன் பி.லோகூர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் உள்ளிட்ட 7 பேருக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனால் அதிர்ச்சியுற்ற உச்சநீதிமன்றம் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியது. இதை தொடர்ந்து கொல்கத்தாவிலுள்ள வீட்டில் கர்ணன் இல்லாததால் சென்னை வர அம்மாநில போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.