கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக டெல்லி செய்தியாளர் சாம் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய தனிப்படை டெல்லி விரைந்துள்ளனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி சென்றுள்ளனர். 

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் திடீர் தகவல் கொண்ட ஆவணப்படத்தை டெல்லி பிரஸ் கிளப்பில் வைத்து தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில் கொடநாடு எஸ்டேட் 5 கொலை மற்றும் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் கொள்ளை நடந்தது ஆகிய சம்பவங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னணியில் இருக்கிறார் என்று கூறியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுகுறித்த ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே குற்றச்சாட்டை வழக்கின் 2-வது குற்றவாளியும், கூலிப்படை தலைவனுமான சயன் மற்றும் மனோஜ் பத்திரியாளர்களிடம் குறிப்பிட்டு தெரிவித்தார். 

ஆனால் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கும் தமக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதற்கு பின்னணியில் அரசியல் பின்புலம் உள்ளது என விளக்கமளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் உட்பட 2 பேர் மீது சென்னை குற்றவியல் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்நிலையில் டெல்லி செய்தியாளர் மேத்யூஸ் மற்றும் சயனை கைது செய்ய தமிழக போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் 2 தனிப்படைகள் டெல்லி சென்றுள்ளனர்.