கொடநாடு கொலையில் தொடர்புடைய 2 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி மர்ம நபர்களால் கொலை செய்யபட்டார். அவருடன் பணிபுரிந்த மற்றொரு காவலாளியும் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜும் அவரது கூட்டாளி சயான் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர்.

அப்போது, திடீரென கனகராஜ் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல், சயான் என்பவரும் அதே நாளில் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்தனர். மேலும் கேரளாவில் இந்த வழக்கு தொடர்பாக 2 பேரை கேரள போலீசார் கைது சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெம்சீர் அலி, சித்தன் ஜாயை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர். அதற்கு கோத்தகிரி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து 2 பேரையும் கோத்தகிரி அழைத்து வந்தது தமிழக போலீஸ்.