கொடநாடு வழக்கு: நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி போலீசார் இடைக்கால அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.
இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கொடநாடு வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் தன்னை திட்டமிட்டு சேர்க்க சதி நடப்பதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஆனால், இது அரசியல் நோக்கத்திலான விசாரணைகள் அல்ல; உண்மை குற்றவாளிகளை கண்டறியும் விசாரணை என்று முதல்வர் ஸ்டாலின் பேரவையிலேயே விளக்கம் அளித்துள்ளார்.
கொடநாடு வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவை ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையிலான அதிகாரிகள் வழக்கு தொடர்பாக பலரிடமும் விசாரித்துள்ளனர். அதேபோல், கொடநாடு வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்திஒல் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கொடநாடு வழக்கி இன்று நீலகிரி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இடைக்கால அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். 4 பக்கம் கொண்ட அந்த அறிக்கையில் வழக்கு தொடர்பாக 167 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தந்தையின் கோட்டையை தக்க வைத்தார் சாண்டி உம்மன்: புதுப்பள்ளியில் காங்கிரஸ் அமோக வெற்றி!
மேலும், வழக்கு தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், தங்களுக்கு விசாரணையை இறுதி செய்ய அவகாசம் தேவை எனவும் சிபிசிஐடி போலீசார் கோரினர். இதனையேற்றுக் கொண்ட நீதிபதி அப்துல்காதர் வழக்கை அக்டோபர் 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். அவரது சகோதரர் தனபால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் வெளிவந்து பல்வேறு திடுக்கிம் தகவல்களை தெரிவித்து வருகிறார். ஆனால், அவர் சொல்வதில் உண்மை இல்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக செப்டம்பர் 17ஆம் தேதியன்று கனகராஜ் சகோதரர் தனபால் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.