"முடங்கியது திருப்பூர்!!" - நூல் விலை உயர்வைக் கண்டித்து முழு அடைப்பு
நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் இன்று பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் கிலோ நூல் விலை 130 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 220 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த கிலோ நூல் தற்போது 350 ரூபாயை கடந்து விற்பனையாகி வருகிறது. இதன் காரணமாக பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மூலப்பொருளான பருத்தி, நூல் இரண்டையும் ஏற்றுமதிக்கு தடை, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் பதுக்கலை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல், தமிழக அரசே பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 116 அமைப்புக்கள் இணைந்து திருப்பூரில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சார்பு நிறுவனங்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில், ‘திருப்பூரில் 4 லட்சம் மக்களுக்கு வாழ்வளித்து வந்த பின்னலாடைத் தொழில் நூல் விலை உயர்வால் கடும் பாதிப்படைந்துள்ளது. மேலும் அது 5.63 லட்சம் விசைத்தறி,1.89 லட்சம் கைத்தறி தொழிலையும் பாதித்துள்ளது.உள்நாட்டுச் சந்தைக்கும், ஏற்றுமதிக்குமான உற்பத்தியில் ஈடுபட்டு வருகிற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை இது உருவாக்கியுள்ளது. திருப்பூரில் 4 லட்சம் தொழிலகங்கள் உள்ளன. 4 லட்சம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. ஆகவே தொழில் நெருக்கடி சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிழைப்பிற்காக வந்திருக்கிற தொழிலாளர்களின் வாழ்வுரிமை அபாயத்தில் இருக்கிறது. நூல் விலை கடந்த 13 மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜவுளி தொழிற் சங்கிலியை சந்தையின் கோரப் பிடிக்குள் அரசு விட்டு விடுவது அல்லது பெரும் தொழிலகங்கள் வசம் இத்தொழில் விட்டு விடப்படுவது சரியல்ல. ஆகவே அரசு தலையிட வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தங்கு தடையில்லாமல் நூல் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஜவுளித் தொழிலைப் பாதிக்கிற மத்திய அரசின் கொள்கைகள் மாற வேண்டும். உரிய நேரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே இந்த தொழிலை அரசால் காப்பாற்ற முடியும்’ என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.