knife attack and died who asked drinkers for drinking in near to temple

சேலம்

சேலத்தில் கோவிலின் அருகே சாராயம் குடித்த அண்ணன், தம்பியை தட்டிக் கேட்டவரை கத்தியால் குத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே உள்ள தும்பல் ஐயம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (48). இவர் ஒரு தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி ஜானகி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (30). இவரது தம்பி இளைய அரசன் (28). லாரி ஓட்டுநர்களான இவர்கள் இருவரும் நேற்று இரவு ஐயம்பேட்டை அரசமரத்து பிள்ளையார் கோவிலில் வைத்து சாராயம் குடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த பாலசுப்பிரமணியன் இதனைப் பார்த்து அவர்களிடம் சென்று கோவில் முன்பு வைத்து சாராயம் குடிக்கிறீர்களே? என்று கேட்டுள்ளார். அதனால், அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் போதையில் ஆத்திரமடைந்த சிலம்பரசன், இளைய அரசன் இருவரும் தங்களிடம் இருந்த கத்தியால் பாலசுப்பிரமணியனை சரமாரியாக குத்தியுள்ளனர்.

பாலசுப்பிரமணியத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரின் உறவினர் நடராஜனையும் லாரி ஓட்டுநர்கள் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் மிதந்த பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்தவர்கள் படுகாயம் அடைந்த நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே பாலசுப்பிரமணியனை கொலை செய்த இளைய அரசனை காவலாளர்கள் பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான அவருடைய அண்ணன் சிலம்பரசனை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.